மின்னல் இளவரசன்.

வணக்கம். நான் பெற்றதோ பொறியியல் பட்டம். ஆனாலும் எனக்கு கவிதையில்தான் நாட்டம். வாருங்கள் நண்பர்களே. பாருங்கள். கதம்பக் கவிதைகளை தாருங்கள். உங்கள் விமர்சனங்களை விமரிசையாக.

Monday, May 01, 2006

அபலை பெண்ணே

ஓ அபலைப் பெண்ணே
இந்த பாலையில் வந்து
ஏன் பயிர் செய்ய நினைக்கிறாய்.

நானோ பாறையாகிப் போனவன்
என்னுள் ஈரமில்லை
வேர்விட நினைக்காதே
வேறு இடம் பார்.

வாழ்வின் ஓரங்களிலும்
உணர்வுகளின் எச்சங்களிலும்
சதா பயனித்து கொண்டிருக்கும்
ஒரு சமாளியனிடம்
நீ எதை எதிர்பார்க்கிறாய்.

நீ தருவதற்கு அதிகம் உள்ளது
ஆனாலும் சொல்கிறேன்
என்னிடம் நீ பெறுவதற்கு
ஒன்றுமில்லை.

கண்ணீரின் கண பரிமானம்
என்னை சுற்றி இருக்க
இந்த கனத்த இதயத்துக்கு
காதலின் அருமை புரியாது.

உதிர்ந்துவிட்ட பூக்களுக்கும்
ஒரு காலத்தில் அஞ்சலி
செலுத்தியவன்தான்
இறுதிகட்ட பயணத்திற்கு
என்னை தயார்படுத்தியபோது
நீ ஏன் என்னை
வாழ்வின் ஆரம்பத்திற்கு
அழைக்கிறாய்.

ரணம் படுவதற்கு
இனி இதயமில்லை
புறப்படு பெண்ணே
புதிய புகலிடம் தேடு.

சுனாமி

சுனாமியா
எமனுக்கு பினாமியா

சிற்றலையா பேரலையா
செய்யவந்தது பெருங்கொலையா

நிலையில்லா வாழ்க்கையென்று
அலையடித்துச் சொன்னாயா

அன்று
பொறுமை கடலினும் பெரிதென்றோம்
இன்று
எங்கள் துயரம் கடலினும் பெரிதென்போம்.
அன்று
பொறுமைக்கு உவமையாய் இருந்த கடல்
இன்று
மரணம் எனும் வெறுமைக்கு
உவமையாய் போனதேனோ.

உப்பிட்ட கடல் தாயே
உயிர் எடுத்து மகிழ்ந்தாயோ.
காற்று வாங்க வந்தவனை
கடல் கொண்டு போன கதை
காண வேண்டாம்
கேட்க வேண்டாம்
கடல் தாயே வேண்டுகிறேன்.

கடல் தாயே
உன் தண்ணீரால்
மரணம் வேண்டாம்
எனக் கண்ணீரால் வேண்டுகிறேன்.

உப்பிட்ட உன்னை
மறந்தோம் என்று
உயிர்களை நீயும் பறித்தாயோ
உலகுக்கு பாடம் கொடுத்தாயோ.

இயற்கையை மனிதன் வணங்கவில்லை
என்று
மரணத்தின் இறக்கையாய்
வந்து அழித்தாயோ
இரக்கமற்ற பாடம் கொடுத்தாயோ.

இயற்கையின் தாலாட்டு தான்
கடல் அலை என்றிருந்தோம்.
மரணத்தின் பாடல் அது
என்று மறைபொருளில் சொல்லிவிட்டாய்.

பலரின் கண்ணீரைப் பெற்றதால்தான்
உன் தண்ணீர்
உப்பு காரிக்கிறதா?

அஞ்சலி செய்ய உறவும் இல்லை
அடக்கம் செய்ய ஆளும் இல்லை.

வெட்டியான் வேலையை
நீ மொத்தமாக செய்துவிட்டாய்.

விளையாட சென்றவனை
கொலை போட வந்தாயோ
நடை பயில வந்தவன்
நடை பாதை பிணமானான்.

போதும் உன் கொலை வெறி
போய் உறங்கு கடல் தாயே.
எங்கள் கண்ணீர் வற்றி
போகும் முன்னே
உன் தண்ணீர் வற்றி
போகட்டும்.

Thursday, November 17, 2005

மத்தளம்

நீ மட்டும் அடிபடுகிறாயா
நானும்தான் அடிபடுகிறேன்.
தாயுக்கும் தாரத்துக்கும்
இடையில் மத்தளமாக.

நீயும் நானும் அடிபடுகிறோம்
காதல் எனும் மத்தளமாய்
ஊருக்கும் உறவுக்கும் இடையே.

விடுமுறை

எத்தனை நாள் அனுபவித்தாலும்
நாம் விடுவதாயில்லை
விடுமுறைக்கு விடுமுறை.

விடுமுறை நாள் ஒன்று கூடியதால்
விடுதலையை கொண்டாடுகிறோம்.

இந்தியாவிற்கு இன்னொரு பெயர்
விடுமுறை தேசமென்று.

செந்தாமரை

வண்டு உனைக் கண்டு கொண்டது
மதுவிலக்கு இல்லாத மாளிகையாக

மொட்டிலிருந்து மலராக
சூரியனுக்கு நீ சொந்தமானாய்

மொட்டாக இருந்தபோது
உனைச் சுற்றாத வண்டு
மலர்ந்தபோது மயங்கி விழுந்தது. (தேன் மதுவருந்தி)

காக்கை

ஐந்தறிவு பெற்ற காக்கையிடம் உள்ளது
ஆறறிவு படைத்த மனிதனிடம் இல்லாதது
பகிர்ந்துண்ணும் பண்பு

ஒற்றுமையை உன்னிடமும்
உழைப்பை எறும்பிடமும்
இன்னமும் மனிதன் கற்க மறுக்கிறான்.

வழிகாட்டி

அறிவுக்கு நூலகமும்
ஆக்கத்திற்கு உழைப்பும்
உயர்வுக்கு உள்ளமும்
என்றென்றும் வழிகாட்டிகள்.

அன்று அண்ணல் காந்தி
அஹிம்சைக்கு வழிகாட்டி
இன்று அறிவற்ற மதவாதி
ஹிம்சைக்கு வழிகாட்டி

அன்று கண்கள் சொன்னது
காதலுக்கு நான்தான்
வழிகாட்டியென்று
இன்று காதல் சொன்னது
கண்ணீருக்கும் அதே கண்கள்தான்
வழிகாட்டியதென்று

சுதந்திரம் வழிகாட்டியானது
ஜனநாயகத்திற்கு
அரசியல்வாதி சொன்னான்
ஜனநாயகம் வழிகாட்டியது
என் பண நாயகத்தக்கு

வெளிச்சத்தை இருட்டும்
இருட்டை வெளிச்சமும்
ஓன்றையொன்று தொடர்கிறது
காலமெல்லாம் வழிகாட்டியாக

ஆதிமுதல்
அந்தம் வரை
அறிவுதான் வழிகாட்டி
பகுத்தறிவுதான்....

ரயில் சிநேகம்

தாமரை இலையும்
தண்ணீரும்
ஒன்றோடு ஒன்று
ஒட்டாமல், சிநேகமாய்
ரயில் சிநேகமாய்

உன்னை நான்
உயிர் சிநேகிததியாய் நினைத்திருந்தேன்
நீயோ என்னை
ரயில் சிநேகிதனாய்
மறந்துவிட்டாய்.

புலவர்

தாலாட்டு பாட்டுதனில்
தவப் புதல்வன் தூங்குகிறான்
தாய் பாடும் பாடலுக்கு
எப்-புலவன் ஈடுசெய்வார்.

சேற்று வயல்
கால் புதைத்து
நாற்று நடும் பெண்களுக்கு
பாட்டு தரும் புலவர் யார்.

ஈகை

உன்னிடம் யாசிப்பவனுக்கு
யோசிக்காமல் கொடு
குறைந்த பட்சம் அன்பையும்
ஆறுதலையுமாவது.

இருப்பவர்க்கும்

இல்லார்க்கும்
இடையில் பகை
இருக்கவேண்டியதோ ஈகை.

புன்னகை

பொன் நகை
இல்லையென்றால்
பரவாயில்லை
உன் புன்னகை
போதும் வாழ்ந்திடுவோம்.

நெம்புகோல்

நீர் இறைக்கும்
நெம்புகோல்தான்
ஏற்றமாகும்
வியர்வையெனும் நீர்
இறைத்தால்
உன் வாழ்வும் ஏற்றமாகும்.

Wednesday, November 16, 2005

நேர்மை

இனி வருங்காலங்களில்
அகராதியில் மட்டும்
அர்த்தத்தை தேடலாம்
அங்கும் கூட
அதற்கு இடமின்றி போகலாம்.

கவிதை

வார்த்தைகள் தவமிருக்கும் கூடாரம்
வாழ்க்கை நமக்களித்த இளைப்பாறுதல்
உள்ளத்தை வெளிப்படுத்தும் உணர்வலைகள்
கால வெள்ளத்தால்
அழியாத கனவு பெட்டகம்
காலத்தின் கண்ணாடி
கற்பனைகளின் முன்னோடி
நிறைவேறா ஆசைகளின்
நிழல் வடிவம்
உள்ளதை உரைத்து
நல்லதை விதைக்கும் நல் ஆசான்
அல்லவை போக்கி
நல்லவை தரும் நண்பன்
உன்னதத்தை நோக்கிய பயணம்
உயர்வைதேடும் இமயம்
வார்த்தைகளை இணைக்கும் விளையாட்டு
வருங்காலத்தை பாடும்
வசந்த ராகம்
கோடையில் வீசும் தென்றல்
குளிர்விக்க வந்த மலைச்சாரல்
எழுத்துக்களை மாலையாக்கி
சிந்தனையை சீர்படுத்தும் பூஞ்சோலை.
அன்பார்ந்த கவிநேசர்களே!

வணக்கம்.


நான் பெற்றதோ பொறியியல் பட்டம்.
ஆனாலும் எனக்கு கவிதையில்தான் நாட்டம்.

வாருங்கள் நண்பர்களே.
பாருங்கள். கதம்பக் கவிதைகளை தாருங்கள்.

உங்கள் விமர்சனங்களை விமரிசையாக.